Sunday, August 25, 2013

செல்ல சித்தப்பாக்கள்...

எங்களோடு இவர்கள் 
பிறக்கவில்லை ஆனால்
எங்களுக்கு இவர்கள்
அண்ணன்களும் கூட...
எங்கள் அம்மாவிடம் 
"அத்தாச்சி !!!தோசை ஊத்துங்க "
என கேட்டு விரும்பிச் சாப்பிடும் பொழுது...!!!

ஏன் அம்மாவிடம் கேட்டால் கூட
இதை ஒத்துக் கொள்வார்...
அவளும் குருவு, ராஜு
என்று எங்களைவிட
செல்லமாய் அழைப்பதனால்...

அம்மாவிற்க்கு ஒன்றென்று உடனே
மூத்த பிள்ளை ஓடிவந்து
பார்த்துக் கொள்ள,
இளைய பிள்ளை வர
முடியா சூழலால் மனமுருகி
அழுது கொண்டிருந்ததை
நாங்கள் ஒரு போதும் மறவோம்...!!!

எங்களோடு இவர்கள்
பயின்றதும் இல்லை..
இருந்தும் இவர்கள்
எங்களுக்கு நண்பர்களும் கூட...
சித்தப்பாவோடு சென்றால்
சினிமாவுக்கு செல்லலாம்
எங்கள் வீட்டில்...
அதோடு மட்டுமா திருவிழா
காலத்தில் தெரு சுத்தித் திரிவதும்
இன்றும் இவர்களோடு தான்...


சில நேரங்களில் இவர்கள்
குருக்களாகவும் இருந்தனர்...
"கேரம்" விளையாட 
கற்றுக் கொடுத்தனர்...

இவர்களுக்கு நாங்கள்
பிறக்கவும் இல்லை
இருந்தும் இவர்கள்
எங்களை கண்டித்ததும் உண்டு...
தந்தைகளாய்...!!!
கல்வியில் கவனம் வேண்டுமென்று !!!
வாழ்க்கைக்கு வழிகாட்டினர்...
தாங்கள் பட்ட இன்னல்கள்
நாங்கள் பட்டுவிடக் கூடாதென்று...

உண்மையில் இவர்கள்
எங்களுக்கு சித்தப்பா உறவு...!!!


இவர்களுக்கு கல்யாணம் 
என்றதும் சந்தோசம் பல 
இருந்தும் சில 
பயமும் இருந்தது...
வரன் எப்படி இருப்பர்? 
என்று... நல்ல வேலை
வரம் தான் பெற்றிருக்கிறோம்
இவர்களைப் போலவே 
அவர்களும் அமைந்துவிட்டனர்...



தனிமை நிறைந்த இந்த இரவு
இந்த தமிழையும் குடுத்தது...
இன்று இவர்களுக்கு பிறந்த நாள்...

வாழ்த்துக்கள் (அண்ணன்களே...நண்பர்களே....சித்தப்பாக்களே) .... 

Thursday, August 22, 2013

விளக்கு நாச்சியார்...!!!!

வீடு மொலுகி
மார்கழி பனியோடு
புள்ளிகளை இணைத்தும்
புள்ளிகளின் இடையிலும்
இரு ரகமாய் சிலபல
மாக்கோலம் போட்டோம்
நேற்று இரவு!!!

காலையில் தோரணம் கட்டி
பொங்கல் வைத்தோம்...
தண்ணீர் கொதிக்க,
நம் உழைப்பும்
அதில் வேகும் அரிசியாய்
நாம் படும் துன்பங்கள்
வெந்து வெல்லமாய்
வெற்றி கலந்து பொங்கலாய்
இன்பம் பொங்குகிறது...

புது நெல் விரித்து அதில்
ஆச்சிக்கு ஒன்றும்
அம்மாவுக்கு ஒன்றும்
108 தரிகள் சேர்த்தும்
தெய்வமாய் ஒன்றும்
துணையாய் இரண்டும்
54 திரிகள் சேர்த்தும்
நெய் விளக்காய் மிளிர்கிறாள்
எங்கள் விளக்கு நாச்சியார்..!!!

பொங்கலோடு சேர்த்து
குழம்பு, கூட்டும் படைத்து
தமிழர் திருநாளில்
இத்தமிழையும் படைக்கிறேன்!!!
 

கரு...கறு..!!!

கருவில் இருக்கும் 
குழந்தை போல் 
உன்னில் ( நிலவில் ) 
இருக்கும் கறு ம் பின்பம் 
தோன்றுகிறது..!!!

இது பெயரில்லா புது உறவு !!!

யாரென்று தெரிகிறதா....????
இதுவரை எனக்கு தெரியவில்லை...
ஞாபகம் இருக்கிறது அப்சரா தியேட்டரில்
முதல் வரிசையில் அமர்ந்து 
அன்னார்ந்து பார்த்து அப்புவை ரசித்தது...
ஞாபகம் இருக்கிறது வீட்டு 
தொலைக்காட்சிப் பெட்டிக்கு மேல்
உன் புகைப்படத்தை அட்டையில் ஒட்டி அலங்கரித்தது...
எந்தப் பத்திரிக்கையில் உன் பேட்டி வந்தாலும்
தவறாமல் வாங்கிப் படித்து அதை பத்திரப்படித்தியிருக்கிறேன்..
இன்னும் என் அறையில் இதழ்கள் இருக்கின்றன...

தேர்வுகள் இருந்த போதும் உன்
நேர்காணலை தவர விடவில்லை...
பெற்றோர்களும் தடுத்ததில்லை...

என் அறையில் உன் FlowUP
ஒட்டியிருந்தது மறக்கவில்லை...
ஒரு நோட்டுப் புத்தகத்தில்
உன் புகைப்படங்களை சேமித்து
ஒட்டிவைத்து
பத்திரப்படுத்தியிருக்கிறேன்...

முதல் முறையாக முதலாம் நாள்
காட்சி பார்த்தது உன் படம் தான்...

நீ சந்தித்து வரும் தடைகளைக் கண்டு
என் நண்பர்கள் எனைக் கூப்பிட்டு
உனைக் காணும் பொழுது
என் ஞாபகம் வருகிறதென்கின்றனர்..
யார் நீ என்று தெரியவில்லை...
உனக்கும் எனக்கும் என்ன உறவென்று புரியவில்லை...

வயதில் இரண்டு மடங்கு இருந்தும் உன்னை
அவன் இவன் என்று தான் கூறியிருக்கிறேன்...
தலைவன் என்று சொல்ல மாட்டேன்..
அப்படித்தான் பழக்கியிருக்கிறாய்...

சங்கடங்கள் தாங்கி கொண்டு
சாதனை படைப்பதெவ்வாறு என்று
சரித்தம் எழுதுகிறாய்...!!!

நீ பேசும் தமிழ் மூலம்
அதன் மீது காதல் கொண்டு
கவிதை என்று சொல்லிக் கொண்டு
நானும் சில எழுதுகிறேன்...

தொழில் நுட்பம் அறிவெதெப்படி
என்றும் கற்றுக்கொடுக்கிறாய்...

சரி, என் உத்யோகம் சிறக்க சிரு
வழியும் போதிக்கிறாய்...உன் படைப்பை
வினியோகம் செய்யும் மூலம்...

படித்து முடித்து நாங்கள் மட்டும்
வெளி நாடு சென்று உத்யோகம் செய்ய,
படம் எடுக்க நீயும் சென்று திரும்பி வந்து விடு..
கொடி ஏற்றி குதூகலமாய்
கொண்டாடும் குடிமகன் நீ...
இங்கு நிறங்கள் பல கண்டு
நிரந்தரமாக் குடி பெயர்ந்து விடாதே...

"மனிதம்" கற்றுத் தந்த கடவுளா நீ...இல்லை...
வெரும் கமல் தான் என்றாலும்
சந்தித்து பேசியதில்லை நம் இருவரும்
எதுவாகவும் இருந்துவிட்டு போகிறது
நம் உறவு..."இது பெயரில்லா புது உறவு.."

கட்டிடத்து திமிங்கலம்..!!!

சிறிதாய் மழை பெய்து
மண் வாசனையுடன்
மீன் வாசனையும் சேர்ந்து கொண்டது
பட்டினபாக்க கடற்கரை சாலை
பயணத்தின் போது...!!!

சிறகடித்து பறந்தது 
என் மனம் மட்டும் அல்லாது
மீன் இறை தேடி 
காகக்கூட்டமும் தான்...

கட்டிடத்து மாடியில் அமர்ந்து
சற்று தொலைவே நோக்க
எதிர் கட்டிடத்து மாடியில் இருந்து
எகிறிக்குதிக்குது (சிமெண்ட் )திமிங்கலங்கள் சில
வானம் எனும் நீல பெருங்கடலை நோக்கி.. 

அம்...மா...

நீயே என்னை அடித்த போதும்
உன்னையே அலறி 
அழுது அழைக்கின்றேன் - 
அம்........மா............

(பக்கத்து வீட்டு சிறுவன் ஒருவன் 
அம்மாவிடம் அடிவாங்கி அழுதுகொண்டிருக்க 
மனதில் தோன்றியது!!!)

அழகிற்கு அணிகலனாய்..!!!

உன் அழகில் 
சொக்கிவிடக்கூடதென்று
உன் அருகில் 
தி ஷ்டிபொட்டாய் இருக்கிறது
இன்று ஒரு நட்சத்திரம்...!!! 
அட இதுதான் அழகிற்கு 
அழகு சேர்ப்பதா!!!

விடுக(வி)தை?

பகலவன் சென்று
இரு மணி நேரம்.
பெளர்ணமி நிலவு,
பனி விழும் இரவு.
பகல் வந்து சேரும்
பத்து மணி தூரம்.
பணி முடிந்து நானும்
வீடு வந்து சேர்ந்தேன்...!!!

இப்பொழுது நேரம் என்ன?
விடை சொல்வீர்!!! பார்ப்போமா...!!!

விண்மீன் துளிகள்!!!

மழைத்துளியில் நடந்து கொண்டு
அன்நார்ந்து வானைப் பார்க்க,
விண்மீன்கள் (நட்சத்திரங்கள்) 
எதுவும் அங்கில்லை!!
அவை அனைத்தும் 
ஒவ்வொன்றாய் என் மீது 
விழுந்து , நனைத்து 
கொண்டிருக்கிறது
மழைத்துளியாய் ...!!!!

சிவ நாமம் அல்ல இது..!!!

காணக் காத்திருந்து
கால்கள் கடக்காமல்
சிறு தூரம் சிற்றெறும்பாய்
வரிசையில் நடந்து கொண்டே
வில்வம் கையில் மாற்றி
நாதன் உன் துதிபாட
விரைவாய் எமை அழைத்தாய்
அழகாய் வரவேற்றாய் -
அன்னையே !!!
அப்பனே உனைக் காண
அடிவைத்து அடி நகர்ந்தேன்
ஆராதணை அழகோடு வில்வம்
சமர்ப்பித்து மீண்டும் துதிக்கிறேன்
"நமசிவாய வாழ்க
நாதன் தாழ் வாழ்க
இமைப் பொழுதும்
என் நெஞ்சில்
நீங்காது வாழ்க" !!!

இதற்கு தானே ஆசைப்பட்டாய் கிரிதரா!!!

இதற்கு தானே ஆசைப்பட்டாய்
கிரிதரா!!!
நண்பர்களின் நகைச்சுவைப் பேச்சும்
குழந்தைகளின் குதூகல ஆட்டமும்
நிறைந்தோடியது இன்றைய
மாலை நேர எலியட்ஸ் கடற்கரை!!!

நிலவுக்கு சென்று வந்தோம்
முதல்முறையாக..தொலை நோக்கி வாயிலாக !!!

சுட்டுத் தீர்த்தோம் சிலபல
ரவைத் தோட்டாக்களை!!!
திண்ணும் தீர்த்தோம் -
சுட்டுத் தந்த மிளகாய் பஜ்ஜியை.,

ஐஸ்கிரீம் குளிரும்
ராஜாவின் இசையும்
முடியாது என்று சொல்லியும் கூட
சொற்கள் தானாய் மனதினில்
அணிவகுத்தது!!!


நாள்: மார்ச், 24
நேரம்: மாலை முதல் இரவுப் பொழுது...

ரயில் பயணம்...

காதும்,தண்டவாளமும்
இரண்டாய் நிற்க,
இணைத்துக் கொண்டிருக்கிறது
ராஜா முதல் ரஹ்மான் தொட்ட
இசையும் இந்த ரயில் பயணமும்...!!!

இரவுப் பயணத்தில்
இரயிலில் இருந்து கொண்டு
தொலைவில் பார்க்க
இருண்ட காட்டில் நகர்வது
மின்மினிப் பூச்சிகளா ???
இல்லை அவை அனைத்தும்
மின் விளக்கு 
ஏந்திய ஊர்திகள்!!!

விசை !!!

பூமியில் நிற்க‌
புவி ஈர்ப்பு விசை 
என்றால் அதையும் மீறி
என்னை ஈர்த்து கொண்டிருக்கும்
உன் விசைக்கு என்ன பெயர்
சித்திரை நிலவே!!!

மே தின உழைப்பாளர்கள்...!!!

மே தின கொண்டாட்டம் முடிந்தது...
சிறப்புரை ஆற்றிய 
பெரியவர்களும் பங்கேற்ற 
கடைநிலை உழைப்பாளர்களும் 
மகிழ்வோடு
விடைபெற்றுச் செல்ல...

ஒருங்கினைத்தவர்கள் 
ஓரமாக நின்று மேற்பார்வையிட...
மேடைகளையும், ஒலிபெருக்கிகளையும், 
அலங்கார விளக்குகளையும்
கலட்டிக் கொண்டிருந்தனர் ஊழியர்கள் - மே தின
விடுமுறையை மறந்து.... இவர்கள் வியர்வைக்கு
தக்(ங்)க பரிசாய் "வெற்றி"யை தவிர
வேரென்ன இருக்க முடியும்... !!!!

காசுகள் இவர்கள் கண்டதில்லை...மாறாக
கஷ்டங்களை தான் காண்கின்றனர்...
மன நிறைவு தராத சந்தோசங்களை விட
மன வலிமை தரும் சங்கடங்கள் தான் அதிகம்..!!!

காசுகள் இவர்கள் சேர்க்கவில்லை தவறாமல்
கல்வியை சேர்த்துக் கொண்டிருக்கின்றனர் -
தங்கள் செல்லச் செல்வங்களுக்கு....
உங்கள் உழைப்பிற்க்கு அவர்கள் ஊதியம் பெருவர்..
மகிழ்வோடு கொண்டாடுவோம்...
உழைத்து கொண்டே மே தினத்தை...!!!!

சிற்பி !!!

உன் உருவம் தெரியாது...
இறைவன் உருவம் இதுவென்று
அறிமுகம் செய்து வைத்தாய்...
இவரின் சக்தி அதிகம் 
எனில் இவருக்கு எடுக்கும் 
விழாக் கொண்டாட்டம்...
உனக்குப் புகழ் அது சேர்க்கும் 
இவருக்கு சிலை 
வடித்த சிற்பியே... !!!
உன் படைப்பை 
கொண்டாடுகிறோம் 
கடவுளாக கருதிக் கொண்டு...!!!

வானவில்...அம்பு????

வானவில் இங்கிருக்க 
அம்பு தான் எங்கிருக்கிதோ...???

தாக்கிக் கொண்டிருக்கிறது... 
மழை துளிகளாய்...

சிறுவயதில் தொலைக்கா ட்சியில்,
பாரதப்போரில் கண்ட
அம்புச் சண்டை போல...

கேள்வி தொடர்கிறது...
எய்பவர் யாரோ????

பனிமலரும் மரியானும்..

மரியான் உன்
காதோரம் காதல் 
சொல்லி காதோரம் 
முத்தமும் தந்தேன்
தொலைபேசி வாயிலாக....

நீ வரும் 
தேதி சொன்ன
பேசி இன்று-
தொலைந்து ,
நீ படும் வேதனை
சேதி சொல்லுது...

தொடர்ப்பு துண்டித்து விட
நீ வருவதை உணர்கிறேன்
உள்ளார...

"எங்க போன ராசா...
சாயங்காலம் ஆச்சு....
.... என்ன செய்ய ராசா....."

- பனிமலர்....

"பனிமலரே! பனிமலரே!!
பனிமலரே!!!" நான்
தொலைந்துவிட்டு துயரப்பட
தொலைபேசி கிடைத்து
அழைத்தேன் உன்னை...
"எல்லாம் முடிந்து விட்டது"
என்று சொல்ல, நான் அரியாது
உன் துணை ஆரம்பம் ஆனது
" ஏ... மரியான் வா" என்று சொல்ல...
கடல் கண்டேன் நம்
கரை திரும்பினேன்...
"கடல் ராசா நான்....
மரியான்...நான்"

அ...ஆ...அக்கா...!!!

அம்மையும் வளர்த்து
ஆச்சியையும் வளர்த்து, என்
இன்னல்களும் கலைந்திட
ஈன்ற குழந்தையாய் 
உடன்பிறந்த என்னையும்
ஊட்டி வளர்த்தாய்...
எண்ணங்கள் நிறைந்திட
ஏட்டுக் கவிதை பிறந்தது
ஐயமின்றி ஒப்பற்ற 
ஒரே தோழியாய்
ஓங்கி நிற்கிறாய்...
ஒளவியம் இல்லா மணியே...!!! 

வாழ்க்கையும் ஒரூ வட்டம் தான்...

இன்பத்தையும் துன்பத்தையும்
பகிர்பவன் நண்பன் 
என்றால் கவிஞனுக்கு 
தெரியுமா ? தெரியவில்லை...
"காகிதம்" தான் உற்ற 
நண்பன் என்று...
பேனாவின் கனம் குறைய
மனதின் கனமும் குறைகிறது...

எரு அடுக்கி
வைக்கல் பரப்பி
கலிமண் பூசி
விறகடுக்கி
தீயும் மூட்டி
உயிர் இல்லா உடல்
உரு கலைவது மட்டுமல்லாது
உயிர் இல்லா சிலை
உரு பெருவதும் இப்படித்தான்...
சற்று சிந்தித்து பார்த்தால்
வாழ்க்கையும் ஒரூ வட்டம் தான்...

உயிர் இழந்து உரு கலைந்து
மண்ணோடு கலந்து பின்
சிலையாய் உருவெடுத்து
மனிதன் தெய்வமாகிறான்....

மனிதருள் பிரிவு
மேல் கீழ்
என்றில்லை என்பேன்...
இருவரும் செய்வது
அர்ச்சனையும், ஆராதனையுமாய்
ஒன்றி இருக்க....இவருக்கு
தெரியமா? தெரியவில்லை
அவரும் நாம் வாழும்
வாழ்க்கைதான் வாழ்கிறார் என்று.???

வரம் வேண்டும்...!!!

இயற்கையும் வளமும்
நிறைந்து கிடக்க,
கலாச்சாரமும் கடவுளும்
காற்றோடு கலந்திருக்க,
பாசமும் பந்தமும்
பறந்து கிடப்பது தான்
எங்கள் பாரதம்...!!!

எப்பிறவி எடுப்பினும்
இப்பாரதத்தில் பிறந்திடும்
வரம் கேட்பேன்....!!!

தாய் மண்ணே வணக்கம்... ♥♥♥

சுதந்திரம் பெற்றுத் தருவீரோ....????

இவ்விடம் பெருவதற்க்கு
எவரெவர் பாடுபட்டரோ
அனைவரையும் அன்போடு
இத்தினத்தில் வணங்குகிறோம்...!!!

எக்கடன் பட்டாலும் நீங்கள் பட்ட
இன்னல்களை ஈடுகட்ட முடியாது,
ஏற்கனவே பெற்றுத் தந்த போதும் கூட
மறுமுறை அவதரித்து அரசியல் அல்லா
சுதந்திரம் பெற்றுத் தருவீரோ....????

கண்ணமா...கின்னமா...நிலவே நீ...!!!

கிள்ளும் கண்ணமா நீ, இல்லை
அல்லும் கின்னமா நீ
உருக்கிய தங்கமாய்
இன்று நீ காட்சி 
அளிக்கிறாய்
அழகிய நிலவே !!

என் ஜன்னல் அருகில்
நீயும் அமர்ந்திருக்க
என்னுடன் நீயும் 
பயணிக்கிறாய்,
என் தனிமை தவிர்க்க !!!

நிதர்சன நிலா(லை) மாற்றம்....!!!!

சந்திரனே...!!!
அழகாய் இருந்தாலும்
சிறிது ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்...
நித்தம் நீ
வளர வளர
நிலை மாறுகிறாய்
எம்மைப் போல்...!!!

அன்னையர்களே இனிமேலாவது
இவனைக்காட்டி நம் 
சந்ததியருக்கு உணவூட்ட
வேண்டாம்... "தொட்டில் பழக்கம்
சுடு காடு வரைக்கும்" என்பதால்...!!!
தினம் தினம் ஊட்டுகையில் இவன்
வடிவமும் மாறி இருக்கிறான்...
திசையும் மாறி நிற்கின்றான்...
மறைமுகமாக மாற்றத்தையும்
ஊ ட்டிக் கொண்டிருக்கிறோம்...
அதைக் கண்டு நாமும் நம் நிலை
மாறிக் கொண்டிருகிறோம்
நித்தமும் நிதர்சனமற்று!!!

மகிழ்ச்சியும், மனக்குழப்பமும் ஒருசேர்ந்த இடம்...

மகிழ்ச்சியும், மனக்குழப்பமும்
ஒருசேர பைகளை
தூக்கிகொண்டு
இங்குட்டும்,அங்குட்டும்
பரபரத்து கொண்டிருக்கும்
பெற்றோர்கள்...

கல்லூரியில் இடம் கிடைத்ததை
குறுஞ்செய்தியும் குறும்புமாய்
பகிர்ந்து கொண்டிருக்கும்
இன்று அனுமதி பெற்ற
இளம் பொறியாளர்கள்...

அருகில் உள்ளவருக்கு
இது கிடைக்கலை என
புதையல் கிடைத்த
சந்தோசத்தில் உடன் சென்ற
மாமன் மச்சான்கள்...

வந்தோர் அனைவரும் தவறாது
உண்டு செல்லும் கோன்ஐஸ்...

கல்யாணக்கூட்டமா இல்லை இது
கல்லூரிக்கு சேர்க்க நடக்கும் கலந்தாய்வுக் கூட்டம்...

இடம்:அண்ணா பல்கலைக்கழகம்
நேரம்:மாலை 5.40

தேதி: ஜுலை 3, 2013